உலகின் மிக  நீளமான நதி!

உலகின் மிகமிக நீளமான நதி! இந்த நைல் நதி உருவான கதை ஒன்று கிரேக்கப் புராணங்களில் காணப்படுகிறது! அந்தக் கதையைப் பார்ப்போம்!
உலகின் மிக  நீளமான நதி!

நைல்!


உலகின் மிகமிக நீளமான நதி! இந்த நைல் நதி உருவான கதை ஒன்று கிரேக்கப் புராணங்களில் காணப்படுகிறது! அந்தக் கதையைப் பார்ப்போம்!

 கிரேக்கக் கடவுள்களிலேயே ஜீயஸ் மிகவும் சக்தி வாய்ந்தவர்! ஏனெனில் அவரால் தான் நினைத்த உருவத்தை எடுக்க முடியும். மேலும மற்றவர்களின் உருவத்தையும் தான் விரும்பியபடி மாற்றி விடுவார். காரணம் அவருக்கு பொய் பேசுவர்களைக் கண்டால் பிடிக்காது. இதன் காரணமாக எல்லா உயிரினங்களும் ஜீயûஸக் கண்டு நடுங்கின.

 ஜீயெஸýக்கு "ஹீரா' என்னும் அழகிய மனைவி ஒருத்தி இருந்தாள். யாருக்குமே பயப்படாத ஜீயெஸ் தன் மனைவி ஹீராவுக்கு பயந்தார்! காரணம் அவள் கண்களில் இருந்து

யாரும் எதையும் மறைக்க முடியாது! ஜீயெஸ் யாரைச் சந்தித்தாலும் அவளுக்குத் தெரிந்துவிடும்!

 ஒரு முறை பூமியில் ஜீயெஸ் காலாற நடந்து கொண்டிருந்தபோது ஓர் அழகிய பெண்ணைக் கண்டார். அந்தப் பெண்ணின் பெயர் "லோ' என்பதாகும். அவள் அழகில் அவர் மயங்கினார். தன் மனைவியின் கண்களுக்குத் தன் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க பூமிப்பந்து முழுவதையும் கரு மேகங்களால் சூழச் செய்தார்.

பின்னர் "லோ' வைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பூமியை ஆனந்தமாகச் சுற்றி வந்தார்! ஆனால் ஹீராவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்து விட்டன. அவள் பூமியை நோக்கிப் பறந்து வந்தாள். இதை அறிந்த ஜீயெஸ் லோவை ஒரு பசுமாடாக மாற்றினார்! ஹீரா வந்து பார்த்தபோது ஜீயெஸின் அருகே ஒரு பசுமாடு இருந்தது.

 ""இந்தப் பசு யாருடையது?'' என்று கேட்டாள்.

 ""தெரியவில்லை'' என்றார் ஜீயெஸ். உடனே அதனைத் தனக்குப் பரிசாக

அளிக்குமாறு வேண்டினாள். வேறு வழியில்லாத ஜீயெஸ் அதனை அவளுக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஹீரா பாதாள உலகில் அதை மறைத்து வைத்தாள். அதற்கு காவலாக ஒருவரை நியமித்தாள்.

 பாதாள உலகில் சிறைப்பட்டிருக்கும் "லோ' வைக் காப்பாற்ற எண்ணிய ஜீயெஸ், தன் மகன் அப்பல்லோவை அழைத்து ஒரு பாடல் பாடுமாறு கூறினார். ஏனெனில் அப்பல்லோ பாடினால் தூங்காதவர் கூடத் தூங்கி விடுவர்!

 அவன் பாடவும் காவலாளி தூங்கிவிட்டான்! அந்த நேரத்தில் பசு வடிவிலிருந்த லோ தப்பி ஓடினாள். இதை அறிந்து ஆத்திரமடைந்த ஹீரா, கடு விஷம் கொண்ட பூச்சி ஒன்றை உருவாக்கி அந்தப் பசுமாட்டைக் கடிக்குமாறு ஏவினாள். இதை அறிந்த லோ கடலுக்குள் பசு வடிவேலேயே குதித்து நீந்தி பல்வேறு துன்பங்களைத் தாண்டி எகிப்தை அடைந்தாள்.

 லோ அடைந்த துன்பத்தைக் கண்டு மனமிரங்கிய ஹீரா அவளை மனித உருவில் மாற்றினாள். ஆனால் தன் கணவனிடம் இனி ஜீயெûஸச் சந்திக்கக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்டாள்.

 ஆனால் பொய்யே பேசாத கடவுள் பொய் பேசியதால் அவரால் உருவாக்கப்பட்ட கருமேகங்கள் மழையாகப் பொழியத் தொடங்கின! எப்படிப்பட்ட மழை தெரியுமா? கனமழை! தொடர்ந்த பல வருடங்களுக்குக் கொட்டித் தீர்த்தது. தண்ணீர் பெரும் பள்ளத்தில் நிரம்பி அந்த இடமே ஒரு ஏரியாக மாறியது. எகிப்தின் பாலைவனத்தில் மனித உருவில் தவித்துக் கொண்டிருக்கும் லோ வின் தாகத்தைத் தணிக்க அந்நீர் ஒரு ஆறாகப் பெருக்கெடுத்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்தது. அதுவே "நைல் நதி' என்று கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.

 இந்நதியானது தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்டீரியா, தெற்கு சூடான், மத்தய சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. அதனால் இதனை "சர்வதேச ஆறு' என்றும் கூறுவர்.

 நைல் நதி "வெள்ளை நைல்' மற்றும் "நீல நைல்' என இரு கிளைகளைக் கொண்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவின் "விக்டோரியா ஏரி' யில் இருந்து வெள்ளை நைலும், (இது தான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான் வழியாகப் பாய்கிறது.) எத்தியோப்பியாவில் உள்ள  "டானா ஏரி' யில் இருந்து நீல நைலும் (இது சூடானின் தென் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.) உருவாகின்றன. இவ்விரு ஆறுகளும், சூடானின் தலைநகர் "கார்டூம்' இல் ஒன்று சேர்ந்து நைல் நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

 எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.

 "நைல்' என்ற சொல்லுக்கு எகிப்திய மொழியில் ஆறு என்று பெயர். நைல் நதியின் தோற்றுவாய் எது என்பதில் இன்றளவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. விக்டோரியா ஏரியே இதன் முக்கியத் தோற்றுவாய் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஏரி உருவாக பல்வேறு சிற்றாறுகள் துணை புரிகின்றன. அவற்றுள் முக்கியமானது "காகேரோ' என்னும் ஆறு ஆகும். இது டான்சானியாவில் "புகோபா' என்னும் இடத்தில உற்பத்தியாகிறது. இது தவிர "ருவியோரான்சா'...,"நியாமராங்கோ' போன்ற பல சிற்றாறுகளும் விக்டோரியா ஏரிக்கு நீர் வழங்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் ஒன்று கூடி "ருசுமோ' என்ற பெயரில் அருவியாக விழுகின்றன. நைல் நதியின் தோற்றுவாய் என்று நம்பப்படும் இடத்தை "கிஷ் அபே' என்று அழைக்கிறார்கள்.

 எத்தியோப்பியாவில் பெய்யும் கனமழையால் நைல் நதியில் பெருக்கு ஏற்படுகிறது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி நீர் மட்டம் உயரும். எத்தியோப்பியாவிலிருந்து நீர் மட்டும் அடித்து வராமல் வளமான கருப்பு நிற வண்டல் மண்ணையும் நைல் நதி அடித்து வருகிறது. அக்டோபர் மாதம் வெள்ளம் முழுவதும் வடிந்த பிறகு விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் அறுவடை நடைபெறும்.

நைல் டெல்டா

 ஆறுகள் கடலுள் சென்று கலக்கும் இடத்தில் தாம் அடித்து வரும் வளமான வண்டல் மண்ணை கடற்கரையை ஒட்டிய பகுதியில் சேர்த்து வைக்கின்றன. இப்படி சேரும் மண்படிவுகள் நாளடைவில் அதிகமாகி ஒரு புதிய சமவெளி ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் நில அமைப்பை "டெல்டா' என்று கூறுவர். இப்படி ஆறுகளால் ஏற்படும் டெல்டாக்களிலேயே மிகவும் பெரியது நைல் டெல்டா ஆகும். இது மேற்கே அலெக்டாண்ட்ரியாவில் தொடங்கி கிழக்கே செய்ட் துறைமுகத்தில் முடிவடைகிறது. மேற்கிலிருந்து கிழக்காக இதன் நீளம் 240கி.மீ ஆகும். வடக்கு தெற்காக இதன் நீளம் வடக்கு தெற்காக இதன் நீளம் 160கி.மீ ஆகும் புகழ் பெற்ற சூயஸ் கால்வாய் இந்த டெல்டாவின் கிழக்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையும் பயிர்கள்


 அரிசி, கோதுமை, பார்லி ஆகியவை மிக முக்கிய பயிர்களாகும். இவை தவிர கரும்பும் மிக முக்கிய பணப்பயிர் ஆகும். இவை எல்லாவற்றையும் விட நைல் நதிப் பகுதிகளில் மட்டுமே சில குறிப்பிட்ட பயிர்கள் விளைகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது "பாப்பிரஸ்' என்னும் தாவரம் ஆகும். இது ஒரு பல்வகைப் பலன் தரும் தாவரம் ஆகும்.

இதன் பழம் மற்றும் வேர்ப்பகுதிகள் உணவாகவும், தண்டுப் பகுதிகள் ஓடம், படகு, பாய் போன்றவை செய்யவும், இதன் சக்கைகள் காகிதம் செய்யவும் பயன்படுகிறது! இதனால் இது ஒரு முக்கிய பணப் பயிராகவும் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இத்தாவரம் நைல் நதிக்கரை ஓரமெங்கும் தானே செழிப்பாக வளர்ந்திருக்கும். ஆனால் தற்பொழுது நைல் நதியில் நீர்வரத்து குறைந்து விட்டதால் இத்தாவரமும் அருகிவிட்டது. எனவே விவசாயிகள் இதைப் பயிர் செய்கின்றனர்.

மலர்கள்

இது தவிர ஏற்த்தாழ 2000 வகையான அரிய நறுமணம் கொண்ட மலர்கள் இந்தப் பகுதியில் மட்டுமே வளர்கின்றன. அவை வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை எண்ணெய்கள் தயாரிக்க உதவுகின்றன.

மூலிகைகள்


உடல் நலம் பேணும் மருந்துகள் பற்பல மூலிகைகளால் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இறந்துவிட்ட அரசர்களின் உடல்களை நெடுநாட்கள் பாடம் செய்து "மம்மி' களாக மாற்றியுள்ளனர். இம்மூலிகைகளின் மிகப் பெரிய சிறப்பு யாதெனில் இவற்றை நைல் நதிக்கரைகளில் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் வளர்க்க முடியாது! இங்கிலாந்தின் தோட்டக்கலைத் துறை இம்மூலிகைகளை வேறு நாடுகளில் வளர்க்க முயற்சி செய்தது. ஆனால் தோல்வியடைந்தது.

 நைல் நதிக்கரையை ஒட்டி வளரும் மருதாணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இம்மருதாணி கருப்பு நிற மருதாணி என்று இருவகைப்படும். சிவப்பு நிற மருதாணி அழகு சாதனப் பொருளாகவும் கருப்பு நிற மருதாணி கண் மை தயாரிக்கவும், தலை முடிக்கு சாயம் ஏற்றவும் பயன்படுகிறது.

காய்கறிகள்


 பல வகையான பீன்ஸ் வகைகள், பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மற்றும் பல காய்கறிகளும், பருத்தி, சணல் போன்றவையும், இப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. ஆரஞ்சு, திராட்சை, பேரீச்சை, தர்பூசனி, போன்ற பல்வேறு பழவகைகளும் இங்கு அதிகம் பயிராகின்றன.

நைல் நதியும் எகிப்தும்!


 நைல் நதி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது "எகிப்து' ஆகும். ஆனால் இந்நதியின் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இந்நாட்டில் ஓடுகிறது. பண்டைய எகிப்தியர்கள் தங்கள் நாட்டை "கருப்பு நிலம்' மற்றும் "செந்நிலம்' என்னும் இரு பகுதிகளாகக் கருதினர். அவற்றுள் கருப்பு நிலம் என்பது நைல் நதியால் அடித்து வரப்பட்ட வளமான கரு நிற வண்டல் மண் இருக்கும் பகுதியாகும். செந்நிலம் என்பது வறண்ட பாலைவனத்தைக் குறிக்கும். எகிப்தின் இருபுறமும் பாலைவனம் அமைந்து அந்நாட்டைப் பிற நாடுகளிலிருந்து பிரிக்கிறது. மேலும் பகைவர்களின் தாக்குதலில் இருந்து காக்கிறது. கிரேக்க வரலாற்று அறிஞர் எகிப்தை "நைல் நதியின் நன்கொடை என்று வர்ணிக்கிறார். ஆனாலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அது விளை நிலங்களையும் பெரிதும் பாதித்தது.

அஸ்வான் சிறிய தடுப்பணை! (ASWAN LOW DAM)
எனவே பதினோராம் நூற்றாண்டில் எகிப்தை ஆட்சி செய்த மன்னர் "அல் ஹக்கீம்' என்பவர் எகிப்தின் பொறியியல் மேதையும், கணிதவியல் வல்லுனரும் ஆன "இபின் அல் ஹயாதம்' என்பவரை அழைத்து நைல் நதியின் போக்கைக் கட்டுப்படுத்த அணை ஒன்றை கட்டுமாறு ஆணையிட்டார். ஆனால் அந்நாளில் அது சாத்தியப்படவில்லை.

 ஆனால் 18ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பிரிட்டிஷ் பொறியியல் வல்லுனர்கள் 1898ஆம் ஆண்டு  "அஸ்வான்' என்னுமிடத்தில் மிகச் சிறிய தடுப்பணை (ASWAN LOW DAM) ஒன்றைக் கட்டினர். இந்த அணை 1902ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சர்.வில்லியம் வில்காக்ஸ் (SIR WILLIAM WILL COCKS) என்ற ஆங்கிலேயர் இந்த அணையை வடிவமைத்தார்.

அஸ்வான் பேரணை! (ASWAN HIGH DAM)


 1912ஆம் ஆண்டு எகிப்திய பொறியியல் வல்லுனர் "அட்ரியன் டானினோஸ்' (ADRIAN DANINOS) என்பவர் புதிய பெரிய அணையை மேல் பகுதியில் கட்டலாம் என்று தெரிவித்தார். இவ்வணையைக் கட்டுவதால் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தவதோடு மட்டுமல்லாமல் நீர்ப்பாசனம், மீன் பிடித்தொழில் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்தி ஆகியவற்றைப் பெறமுடியும் என்றும் பொருளாதாரத் தன்னிறைவு பெற முடியும் என்றும் கூறினார்.

 எனவே எகிப்தின் அந்நாளைய அதிபர் "அப்துல் நாசர்' உலக நாடுகளிடம் நிதி உதவி கோரினார். அதன்படி சோவியத் யூனியன் நிதி உதவி மற்றும் தொழில் நுட்ப உதவி ஆகிய இரண்டையும் 1958ஆம் ஆண்டு செய்து தந்தது. ஆனால் இந்த அணை கட்ட சர்வதேசத் தொல்லியல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. காரணம் "அபு சிம்பல்' போன்ற பழைமையான ஆலயங்கள் நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகக் கருதின.

 ஆகையால் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(UNESCO)"நூபியா' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1960ஆம் ஆண்டு இந்த அணை இருக்கும் பகுதியின் கீழ் வரும் அத்தனை வரலாற்றுசி சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களையும் அப்புறப்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் நிறுவினர்.

 ஏறத்தாழ 3000 தலை சிறந்த பொறியியல் வல்லுனர்கள் 25,000 உழைப்பாளர்கள், மற்றும் கருவிகள், என சோவியத் யூனியன் அளித்த பிரம்மாண்ட ஆதரவால் புதிய "அஸ்வான் பேரணை' கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இது 1960ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. இந்த அணை 3830மீ நீளமும், 111மீ உயரமும் கொண்டது! இந்த அணையின் பிரம்மாண்டத்தைக் கண்டு பிரமித்த சோவியத் யூனியனின் அந்நாளைய அதிபர் "குருஷ்சேவ்' இதை "உலகின் எட்டாவது அதிசயம்' என்று புகழ்ந்தார்.

 இந்த அணை கட்டியதால் நைல் நதியின் வெள்ளப்பெருக்கு கட்டுப்படுத்தப்பட்டதால் நதி அடித்து வரும் வளமான வண்டல் மண்ணும் குறைந்து விட்டது. இதனால் நிலத்தின் செழுமை குறைந்து பயிர் விளைச்சலும் குறைந்து விட்டது. நீர்ப்பாசனத்துக்காகக் கட்டப்பட்ட அணையால் பயிர் விளைச்சல் குறைந்து போனது ஆச்சரியப் படத்தக்க முரண்பாடு அல்லவா?

மேலும் சில தகவல்கள்!


 *ஒவ்வோர் ஆண்டும் மிகச் சரியாக ஜூலை 15ஆம் நாள் நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்! இது ஒரு அதிசயம் ஆகும்!

  *உலகில் உள்ள நதிகள் யாவும் மேற்கிலிருந்து கிழக்காகவோ அல்லது வடக்கிலிருந்து தெற்காகவோ பாய்கின்றன. இது பூமியின் சுழற்சியால் ஏற்படுகின்றது. ஆனால் நைல் நதி மட்டும் தெற்கில் உற்பத்தியாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து மத்திய தரைக்கடலில் கலக்கிறது!

 *நைல் நதி நீர் வழிப்போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுகிறது. வடக்கு நோக்கி வீசும் காற்றால் நைல் நதியில் வடக்கு நோக்கிய கப்பல் பயணம் மிக விரைவாகவும், எளிதாகவும் இருக்கும். ஆனால் தெற்கு நோக்கிய பயணம் மிகக் கடினமாகவும், அதிக நாட்கள் எடுப்பதாகவும் அமைந்துவிடும்!

 *நைல் நதியின் அகலம் இடத்திற்கு இடம் மாறுபடும். அதிகபட்ச அகலமாக "எட்ஃபூ' (EDFU) என்னும் இடத்தில் 7.5கி.மீ அளவிற்கும், "சில்வா ஜியார்ஜ்' (SILVA GEORGE)என்ற இடத்தில் குறைந்தபட்ச அகலமாக 350மீ அகலமும் காணப்படுகிறது.

 *புரூண்டியில் உள்ள "கியாகா' ஆற்றின் (KYAKA RIVER) தொடங்கி மத்திய தரைக்கடல் வரை உள்ள இந்நதியின் நீளம் 6671கி.மீ. ஆகும்!!

 *நைல் நதி ஆரம்பமாகும் இடத்தில் தொடங்கி அது கடலுடன் கலக்கும் இடம் வரை கப்பலில் பயணம் செய்யும் ஆராய்ச்சிப் பயணம் 2004ஆம் ஆண்டுதான் துவக்கப்பட்டது. இவற்றுள் வெள்ளை நைலின் பயணதூரம் முழுவதையும் கடக்கவே 4 மாதங்கள் ஆனதாம்!

நைல் நதியும் மக்களின் நம்பிக்கைகளும்!

இந்தியர்களின் புனித நதி கங்கை என்பது போல் வட ஆப்பிரிக்க மக்களின் புனித நதி நைல் நதி ஆகும்! எகிப்தியர்களின் ஆன்மீக வழிபாடு நைல் நதிக்கரையிலேயே நடைபெறுகிறது! இவர்கள் "ஹாபி' (HAPI) என்னும் கடவுள் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துபவர் என்றும், "ஃபாரோ' (PHAROH) என்னும் கடவுள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துபவர் என்றும் நம்புகிறார்கள்.

 சூரியனை "ரா' என்ற பெயரில் வழிபடுகிறார்கள். உலகில் உள்ள உயிர்கள் யாவும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக நம்புகிறார்கள். தமது நம்பிக்கையை சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதன் மூலம் உலகுக்கு உணர்த்துவதாகக் கருதுகின்றனர். எனவேதான் பிரமிடுகள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை நைல் நதியின் மேற்குக் கரையிலேயே அமைத்துள்ளனர்.

 மரணத்திற்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருப்பதாக நம்புகின்றனர். எனவே இறந்தவருடன் அவர் பயன்படுத்திய பொருட்கள் மட்டுமல்லாது நைல் நதியின் நீரை ஒரு குடுவையிலும், பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுப்பகுதியையும் வைத்து நல்லடக்கம் செய்கின்றனர்.

 மேலும் இவ்வுலகத்திற்கும் இறப்பிற்குப் பின் உள்ள மறு உலகத்திற்கும் பாலமாக நைல் நதி விளங்குவதாக நம்புகின்றனர்.

 பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்தும்போது "நைல் நதியின் நீர் என்றென்றும் உனக்குக் குடிப்பதற்குக் கிடைக்கட்டும்' என்று கூறுகிறார்கள்!

செழிமை மிக்க பூமியும், வியத்தகு நாகரிகமும், கலைச்செழிப்பும் கொண்ட நைல் நதியின் பெருமையை இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்! போற்றுவோம் "நைல்' நதியை! வணங்குவோம் அப்புனித நீரை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com